கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹொல்டிங்ஸ் நிறுவனம், MAHB-யின் ஒரு பங்கு ஆறு ரிங்கிட் 80 சென்னிலிருந்து ஏழு ரிங்கிட் 70 சென் வரை விற்கப்பட்டது.
இதன்வழி, 2023 நிதியாண்டின் ஊழியர் சேமநிதி வாரியமான, KWSP ஈவுத்தொகை விநியோகத்திற்கு, ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட் வரையிலான வருமானம் பெறப்பட்டது.
2023-ஆம் ஆண்டில், கே.எல்.சி. ஐ எனப்படும் கோலாலம்பூர் கூட்டு குறியீட்டை 11.47 விழுக்காடு மிஞ்சிய MAHB பங்குகளின் செயல்திறனும் பங்கு விற்பனை உத்தியில் ஒரு முக்கிய காரணம் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
''இந்த விற்பனையால் KWSP-க்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி KWSP வெளியிட்ட அறிக்கையில் அக்குற்றச்சாட்டை தெளிவாக நிராகரித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், KWSP பங்குகளை விற்று வாங்கியதன் மூலம் KWSP லாபத்தைப் பதிவு செய்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் அந்த ஆண்டின் மொத்த முதலீட்டு வருமானம் 6,348 கோடி ரிங்கிட்டாக பதிவானது,'' என்றார் அவர்.
MAHB பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் KWSP-க்கு ஏற்பட்ட லாபம் அல்லது இழப்பின் அளவு உட்பட அது KWSP-இன் நிதிநிலை அறிக்கைகளில் எவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, இன்று மக்களவையில் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் செமின் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அவ்வாறு பதிலளித்தார்.
மற்றொரு நிலவரத்தில், MAHB-யின் ஒரு பங்கை 11 ரிங்கிட்டிற்கு KWSP வாங்கியது, அந்நிறுவனம் மீண்டும் அதிக விலையில் பட்டியலிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை ஆகும்.
''MAHB-இன் செயல்பாடுகளை மாற்றுவதன் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும். பட்டியலிடல் முடிந்ததும், உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூட்டமைப்பு தனது முழு கவனத்தையும் செலுத்தும்,'' என்றார் அவர்.
இதன்வழி, KWSP-இன் ஈடுபாடு, அதிக வியூக மதிப்பு, புதிய உத்திகள் உட்பட MAHB-இன் மீட்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அமிர் ஹம்சா கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]