கோலாலம்பூர், 24 பிப்ரவரி (பெர்னாமா) - ம.இ.கா-வைப் பொருத்தவரை நான்கு முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணி என்பது அவ்வளவு கடினமாக இருக்காது.
எனினும், தற்போதைய அரசியல் சூழல் அங்குள்ள மக்களின் மனங்களில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா அல்லது அவர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளதா என்பதை ஆராய்வதற்கு தாம் தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
தாப்பா நாடாளுமன்றத்தின் கீழ் இச்சட்டமன்றம் இருப்பதால் இடைத்தேர்தலை முன்னிட்டு தமது சார்பிலும் ம.இ.கா சார்பிலும் அங்கு தேர்தல் கேந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவருமாகிய டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் கூறினார்.
"அதில் குறிப்பாக ம.இ.கா-வில் மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி ஆகிய பிரிவினர் அங்கு நேரடியாக களமிறங்கி மக்களை சந்திப்பர். அதன் மூலமாக அங்குள்ள மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை கண்டறிய முடியும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
மேலும், அடுத்த மாதத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு தொடங்கும் வேளையில், ஒவ்வோர் ஆண்டைப் போல இம்முறையும் நாடாளுமன்றத்தின் சார்பில் அவர்களுக்கான ஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தவிர்த்து, தேசிய முன்னணியோடு கலந்து ஆலோசித்து, அத்தொகுதியில் இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விவகாரங்கள் ஆகியவற்றிலும் ம.இ.கா முனைப்புடன் செயல்படும் என்று சரவணன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம், மாரடைப்பு காரணமாக பினாங்கு மருத்துவமனையில் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் மரணமடைந்தார்.
அவர் பதவி வகித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், அடுத்த 60 நாட்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)