சிறப்புச் செய்தி

புதுக்கவிதை எழுதும் ஆளுமையை எழுத்தாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்

28/02/2025 08:09 PM

கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- தமிழ் இலக்கியத் துறை மட்டுமின்றி, உலக இலக்கியங்களிலேயே கவிதையே முதல் இலக்க வடிவம் பெற்றுள்ளதாக இன்றளவும் மேற்கோள் காட்டப்படுகின்றது. 

அதில், இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்பாட்டினை கொண்டிருக்கும் புதுக்கவிதை துறையில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களை அதிகம் ஈடுப்படுத்திக் கொண்டு கவிதை புனைகின்றனர். 

எளிய தமிழில் புதுக்கவிதை வடிப்பதும் ஒரு கலையாவதால், நாட்டில் அதற்கு இருக்கின்ற வரவேற்பு மற்றும் அதன் ஆளுமையை வளர்த்துக்கொள்ளும் 
நுணுக்கங்கள் குறித்து சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்த கவிஞர் சிவா விளக்குகின்றார்.

ஆற்றல் மிக்க படைப்பாளர்களை உருவாக்கும் அதேவேளையில், இளைஞர்களை கவிஞர்களாக உருமாற்றுவற்கு நாட்டின் பல இடங்களில் புதுக்கவிதை பயிலரங்குகள் 
நடத்தப்பட்டு வருகின்றன. 

இதுபோன்ற பயிலரங்குகளில் பங்கேற்பதோடு மட்டுமின்றி, கவித் துறையில் முறையான பயிற்சி இருத்தல் வேண்டும் என்று கவிஞர் சிவா வலியுறுத்தினார். 

நாட்டில் தமிழ், இலக்கியம் படித்த அதிகமான இளையோர்கள் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

அது பாராட்டப்பட வேண்டியது என்றாலும், அதன் எழுத்தும் தரமும் இன்னும் ஆழமானதாகவும் ஆளுமை நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சிவா கூறுகின்றார். 

காரணம், எழுத்தப்படும் கவிதைகள் வாசிப்போருக்கும் இரசனையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை, புதுக்கவிதை பயிலரங்கின் பயிற்றுநருமான அவர் உவமையோடு குறிப்பிடுகின்றார். 

அண்மையில், காற்று வெளியிடை கண்ணம்மா எனும் தமது புதுக்கவிதை நூலை வெளியிட்டுள்ள கவிஞர் சிவா, அதில் சமூகம், காதல், உளவியல் சார்ந்த உணர்வுகளை வரிகளில் கோர்த்து வாசகர்களுக்கு கொடுத்திருப்பதாக தெரிவித்தார். 

கவித்துறையில் ஈடுபட்டு இலக்கியமிக்கப் பல எழுத்துப் படைப்புகளை உருவாக்கி வரும் இளைஞர்கள், அதனை வாசகர்களுக்கு தரமானதாக கொடுப்பதுடன், நூல் வடிவங்களில் ஆவணப்படுத்துவம் வரவேற்ககூடியது என்று பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது சிவா கூறியிருந்தார். 


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)