சிறப்புச் செய்தி

செந்தூல் ஆதீஸ்வரன் ஆலய மகாசிவராத்திரி

27/02/2025 08:39 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) --  உடலும் உள்ளமும் சிவநாமம் சொல்லும் மகா சிவராத்திரி, உலகம் முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் நேற்றிரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதில், கோலாலம்பூர் செந்தூலில் வீற்றிருக்கும்  ஶ்ரீ ஆதீஸ்வரன் ஆலயத்தின் நான்கு கால பூஜையுடன் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் சுமார் ஈராயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகின்றது.

பூஜை, அபிஷேகங்களுடன்  பஞ்சாட்சர மந்திரங்கள், தேவாரம், திருப்புகழ், திருவாசகத்துடன் பக்தர்கள் சிவன் புகழ் பாடும் பாமலைகளை பாடி நேற்றிரவு பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்நாளில், சிவனை வழிபடுவது முக்தியைத் தரும் என்று சிவபுராணம் கூறுவதாக ஆதீஸ்வரன் ஆலயத் தலைமை குருக்கள் மோகனசுந்தர சிவாச்சாரியார்  தெரிவித்தார். 

இதனிடையே, அண்மைய காலங்களில், மகா சிவராத்திரி வழிபாடுகளில் இளையோர்களின் வருகையும் ஈடுபாடும் அதிகரித்துள்ளதை காண முடிவதாக ஆலயத்தின் அறங்காவலர்  பழநிவேல் சதாசிவம் கூறினார். 

சிவ வழிபாடு செய்யும்போது, சகல செல்வங்களும் நிறைந்து மங்கள வாழ்வு உண்டாகும் என்பதை நம்புவதால், சிவராத்திரி வழிபாடுகளில் தாங்கள் கலந்து கொள்வதாக ஆலயத்திற்கு வந்த பொது மக்கள் சிலர் கூறினர். 

நேற்றிரவு சிவபெருமானுக்கு அங்கு 1008 பால்குடங்கள் செலுத்தப்பட்ட வேளையில்,  நான்குகால பூஜைகளில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயம் நிர்வாகம் இரவு முழுவதும் உணவுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. 


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)