பொது

தொழில்நுட்ப உலகில் நிலைத்திருக்க பெர்னாமா தொலைக்காட்சியில் ஏ.ஐ

28/02/2025 07:38 PM

கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) --    இன்றைய தொழில்நுட்ப உலகில் பொருத்தமானதாகவும் போட்டித்தன்மையுடனும் நிலைத்திருப்பதை மேம்படுத்தும் நடவடிக்கையாக, பெர்னாமா தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ. கூறுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

பெர்னாமா தொலைக்காட்சியின் உள்ளடக்கங்களை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்நடவடிக்கையும் அடங்கும் என்று அதன் தலைவர் நோர் ஹம்சீலா முஹமாட் ஹம்பாலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுதந்திரம் என்ற கருப்பொருளிலான காணொளியைப் பெர்னாமா தொலைக்காட்சி மலேசியாவில் முதன்முதலாக தயாரித்ததை நோர் ஹம்சீலா சுட்டிக்காட்டினார்.

"இந்த காணொளி தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. எனவே, அதிலிருந்து ஈர்க்கப்பட்டு, நாங்கள் இன்னும் பல ஏ.ஐ காணொளிகளை வெளியிட்டுள்ளோம், மேலும் பெர்னாமா தொலைக்காட்சி செய்திகளில் ஏ.ஐ கூறுகளைச் சேர்க்க முயற்சிக்கிறோம்", என்று அவர் கூறினார்.

இன்று, பெர்னாமா தொலைக்காட்சியின் 17-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, Apa Khabar Malaysia கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நோர் ஹம்சீலா அவ்வாறு கூறினார்.

பெர்னாமா தொலைக்காட்சியின் செயல்பாட்டில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அது சீராக இயங்குவதை உறுதி செய்வதிலும் நிர்வாகம் சவால்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

1998-ஆம் ஆண்டு நான்கு பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட பெர்னாமா தொலைக்காட்சி, 2008-ஆம் ஆண்டில் முழு நேர செய்தி அலைவரிசையாக மாற்றம் கண்டது.

தற்போது, நவீன அரங்குகளுடன் 200 பணியாளர்கள் பெர்னாமா தொலைக்காட்சியில் பணி புரிகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)