பொது

தேமு கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை உயர்மட்ட தலைமைத்துவம் தீர்மானிக்கும்

03/03/2025 07:18 PM

தாப்பா, 03 மார்ச் (பெர்னாமா) --   ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உறுப்புக் கட்சிகள், உயர்மட்ட தலைமைத்துவத்திடம் ஒப்படைத்துள்ளன.

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சிறந்த உத்தியைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தலைமைத்துவத்திடமே விட்டுவிடுவதாக ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கூறினார்.

''ஏறக்குறைய அறுவர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இப்பொழுது தேசிய முன்னனியின் சார்பாக, தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறுவரில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது தேசிய முன்னணியின் கடமை. எந்த வேட்பாளரை தேசிய முன்னணியின் தலைமைத்துவம் தேர்ந்தெடுத்தாலும் அவருடன் இணைந்து வேலை செய்வதற்கு தாப்பா தேசிய முன்னணி தயாராக இருக்கின்றது'', என்று அவர் கூறினார்.

தாப்பா நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் வாக்களிக்கவிருப்பவர்களில், ஏறக்குறைய 14,000 பேர் இளைஞர்கள் என்று டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.

ஆதலால், தேசிய முன்னணியின் இளைஞர் பகுதி மூலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கருத்துகளைப் பெறுவதற்கும், இளைஞர்களைத் தேசிய முன்னனிக்கு அழைத்துச் செல்வதற்கான விவகாரங்களும் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் சரவணன், இவ்வாறு விளக்கமளித்தார்.

''யாரை நியமித்தால் வெற்றிப் பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது என்பதை தேசிய முன்னணியின் தலைமைத்துவம் முடிவுச் செய்யும். குறிப்பாக, இந்த வேட்பாளர்களின் அவர்களின் அனுபவம், மக்களிடம் இணக்கமான போக்கு, அவர்களின் கல்வித்தகுதி, கட்சியில் ஆற்றியிருக்கும் பணி என பல்வேறு நிலைகளில் அவர்களுடைய தரம் நிர்ணயிக்கப்படும்'', என்று அவர் தெரிவித்தார்.

இன்று, பேராக், ஈப்போ, தாப்பாவில், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சரவணன் அதனை கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)