சிறப்புச் செய்தி

அறிவியல், நுட்பவியல், பொதுவியலை உட்படுத்தி 'கலைச்சொல் அகரமுதலி' வெளியீடு

01/03/2025 07:43 PM

கோலாலம்பூர், 01 மார்ச் (பெர்னாமா) - தொன்மையான தமிழ்மொழியை  நவீன தொழில்நுட்பத்தில் இணைக்கும் வகையில் தமிழ்ப் பற்றாளர்கள் பலரும் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், வழக்கத்தில் பயன்படுத்தக்கூடிய பல வேற்றுமொழி சொற்களை கலைச்சொற்களாக்கி, அதை சமுதாய பயன்பாட்டிற்கு கொண்டு வரும் அரும் பணியை பல்லாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் இரா.திருமாவளவன். 

தமது முயற்சியின் முத்தாய்ப்பாக அறிவியல், நுட்பவியல், பொதுவியல் ஆகியவற்றை உட்படுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் அறிஞர்களின் துணையுடன் திரட்டி இருந்த பத்தாயிரம் சொற்களை தொகுத்து நற்றமிழ் கலைச்சொல் அகரமுதலியாக நேற்று அவர் வெளியீடு செய்திருந்தார். 

"மூன்று வகையான அமைப்பு முறையின் கீழ் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இயல்பாக பயன்படுத்தக் கூடிய பல வழக்கச் சொற்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அடுத்து தொடராக இருந்த பல சொற்கள் சுருக்கம் கண்டு தனிச் சொல்லாக உருவாக்கம் கண்டுள்ளது. இறுதியாக அறிவியல், கணிதவியல், நுட்பவியல் ஆகியவற்றை உட்படுத்தி பல புதிய வரவுகளும் இதில் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கில் தாம் தமிழாக்கப்படுத்திய பன்னூற்று சொற்கள் இன்று பள்ளிகள், உயர்க்கல்விக்கூடங்கள், ஊடகங்கள் என்று மட்டுமில்லாமல் உலகளவிலும் பயன்படுத்தப்பட்டு வருவது போல...

இந்நூலில் இடம்பெற்றுள்ள சொற்களும் இனி மலேசியர்களின் புழக்கத்தில் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இச்சொற்களை தாம் உருவாக்கினாலும், அதற்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோரின் ஏற்புதலையும் முறையாக பெற்றிருப்பதால், மலேசியர்கள் இதை தாராளமாக தங்களின் வழக்கத்தில் பயன்படுத்தலாம் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார். 

தமிழ் - ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் இந்நூல் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய  மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவருமான திருமாவளவன், தமிழ்ப்பள்ளிகள் தோறும்  இந்நூலை கொண்டு சேர்க்கும் முயற்சியில் தாம் முனைப்புடன் ஈடுபடவிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இதனிடையே, இந்நூலைப் பெற்றுக் கொண்டவர்களில் சிலர் அதன் மகத்துவம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

"இது தமிழ் ஆய்வாளர்களுக்கு பற்று கொண்டவர்களுக்கும் சிறந்த நூலாகும். இதை வெறுமனே வாங்கி அலமாரியில் அடுக்கி வைப்பதை விடுத்து அதன் உள் அடக்கங்களை நாள்தோறும் கற்றறிய வேண்டும்," என்று தமிழ் இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த பெரி. பெரியநாயகம் தெரிவித்தார்.  

"இந்த நூலை இன்றைய இளம் தலைமுறையினர் நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டும். இதில் பல சொற்கள் தமிழ் வளர்ச்சிக்கும் சொல்லுக்கான புரிதலுக்கும் வித்திடும்," என்று பன்னீர் செல்வம் கருப்பையாவும் அஞ்சலி கதிரவனும் தெரிவித்தனர்.
 
நாதஸ்வர மேள தாள இசை வாத்தியம், காணொளி வடிவிலான சிறார் குறுநாடகம், தமிழ் வளர்த்த மூத்தவர்களைப் போன்று வேடமிட்ட சிறுவர்கள், வாழ்த்துப்பா, பல்லக்கில் கொண்டு வரப்பட்ட முதல் நூல் என்று மாலை மணி ஏழுக்கு தொடங்கிய நூல் வெளியீட்டு விழா இரவு மணி பத்தைக் கடந்தும் இலக்கிய நறுமணத்துடன் நீடித்தது. 

வேலை நாளாக இருப்பினும், தமிழை நேசிக்கும் பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் - இலக்கியப் பற்றாளர்கள், இளைஞர்கள் ஆகியோரால் டான் ஶ்ரீ சோமா அரங்கமே நிறைந்து காணப்பட்டது.

இதனிடையே, 650 பக்கங்களுடன் தரமான முறையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அகரமுதலி நூலை வாங்க விரும்புவோர் 016 - 3262479 என்ற எண்ணில் நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)