சிறப்புச் செய்தி

யூ.எஸ்.எம்-இல் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக தமிழோடு விளையாடு புதிர் போட்டி...

02/03/2025 07:51 PM

கோலாலம்பூர் , 02 மார்ச் (பெர்னாமா) --  ஒவ்வோர் ஆண்டும் யூ.எஸ்.எம் எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக தமிழோடு விளையாடு புதிர் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழோடு விளையாடு புதிர் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

யூ.எஸ்.எம்-இன் இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் அக்னி சிறகுகள் குழுவின் ஏற்பாட்டில் தமிழோடு விளையாடு 3.0 டி.கே.யூ மண்டபத்தில் காலை மணி 7 தொடங்கி மாலை 5.30 வரை நடைபெறும்.

முன்னதாக, இரு முறை இயங்கலை வழியாக நடத்தப்பட்டு வந்த தமிழோடு விளையாடு போட்டியை, இம்முறை நேரடியாக நடத்த முயற்சித்திருப்பதாக அதன் திட்ட இயக்குநர் சரண்யா குணாளன் தெரிவித்துள்ளார்.

''அரசு பொது உயர்கல்வி, தனியார் உயர் கல்வி மற்றும் சம நிலையான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளும் தமிழ் சார்ந்த ஒரு புதிர்போட்டியாகும். மாணவர்கள் தங்களது தமிழ் திறனையும் போட்டித் தன்மையும் வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றார் அவர்.

நான்கு சுற்றுகளாக இப்போட்டி நடைபெறும்.

அதில், தமிழ் அறிஞர்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்று சரண்யா கூறினார்.

''தகுதிச் சுற்று, காலிறுதி சுற்று, அறையிறுதி சுற்று மற்றும் இறுதி சுற்று என்று நான்கு சுற்றுகள் உள்ளன. ஒவ்வோர் சுற்றிலும் தமிழ் அறிஞர்கள் பற்றின கேள்விகள் கேட்டப்படும். ஒளவையார், பாரதியார், திருவள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் ஆகியோர் ஆவர். மொத்தமாக 32 குழுக்கள் இருப்பார்கள். இப்போதைக்கு பத்து குழுகள் விண்ணப்பம் செய்து உள்ளன,'' என்றார் சரண்யா அவர்.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் 32 குழுக்களுக்கான பதிவு நிறைவு பெறும் வரையில் திறக்கப்பட்டிருக்கும்.

ஒரு குழுவில் இரு மாணவர்கள் என்ற அடிப்படையில் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதற்கான செயல்முறைகள் மற்றும் விண்ணப்ப முறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

''ஒரு குழுவில் இரண்டு பேர் இருக்கலாம். ஒருவருமே ஒரே கல்வி கழக மாணவர்களாக இருக்க வேண்டும். இந்த மாதிரி எப்படி விண்ணப்பம் செய்வது அல்லது ஆதரவு வழங்குவது என்ற கேள்விகள் இருந்தால் தமிழோடு விளையாடு 3.0 இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்று தகவல்கள் மற்றும் காணொளிகளை பார்த்தாலே தெரியும். அங்குள்ள இணைப்பில் விண்ணப்பம் செய்யலாம். ,'' என்று  சரண்யா கூறினார்.

இதில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு ரொக்கமும் கிண்ணமும் வழங்கப்படும்.

இப்போட்டியின் மூலம் கிடைக்கும் நிதி பினாங்கில் உள்ள ஓர் ஆதரவற்ற இல்லத்திற்கும் வழங்கப்படும் என்று சரண்யா தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]