உலகம்

டிரம்ப் உடனான உறவை மீண்டும் வலுப்பெற்ற செய்ய முடியும் - செலென்ஸ்கி

03/03/2025 02:23 PM

லண்டன், 03 மார்ச் (பெர்னாமா) --    ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்புடனான உறவை மீண்டும் வலுப்பெற்ற செய்ய முடியும் என்று உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இனி டிரம்புடன் மேற்கொள்ளப்படும் சந்திப்புகள் பொதுவில் நடத்தப்படக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

''அமெரிக்காவுடனான எங்கள் உறவுகள் தொடரும் என்று நான் நினைக்கிறேன். நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். உக்ரேன் உலகின் மிகப்பெரிய நாடு அல்ல, ஆனால் அது அதன் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்காக எவ்வாறு போராடுகிறது என்பதை அனைவரும் காணலாம்'', என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களுடனான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், செலென்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

உக்ரேனுக்கு வழங்கி வரும் உதவியை அமெரிக்கா நிறுத்தும் என்று தாம் நினைக்கவில்லை என்றாலும், எழக்கூடிய எந்தவொரு சவால்களுக்கும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்காவின் உதவிகளைச் செலென்ஸ்கி மறந்து விட்டதாகவும், அவர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுவதாகவும், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு, உக்ரேனுக்கு வாஷிங்டனின் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவு கேள்விக் குறியாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)