கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- வரும் மார்ச் 16-ஆம் தேதி, ஷா ஆலம் ஐடில் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் ஜனநாயக செயல்கட்சியின் 18 பொதுப் பேரவையின் போது 30 மத்திய நிர்வாக செயற்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு, 70 வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கின்றனர்.
இன்று அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில், அந்தோணி லோக், லிம் குவான் எங், கோபிந்த் சிங் டியோ, ராம்கர்பால் சிங், ஙா கோர் மிங், சோவ் கோன் யோவ், ஸ்டீவன் சிம் மற்றும் சொங் சியெங் ஜென் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இப்பொறுப்பிற்குப் போட்டியிடும் பெண்களில் ஹன்னா யோ, திரேசா கோக், தியோ நி சிங், யோ பீ யின், யாங் ஷெஃபுரா ஒத்மான், லிம் ஹுய் இங், விவியான் வோங், வோங் ஷு கி மற்றும் எலிஸ் லௌ ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, 1,650 கிளைகளைச் சேர்ந்த 4,203 பிரதிநிதிகள், இப்பேரவையில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக ஜசெக-வின் தேசிய அமைப்புச் செயலாளர் Steven Sim தெரிவித்தார்.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நம்பிக்கைக் கூட்டணி தலைவராக இதில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி மற்றும் மக்களுக்காக தங்கள் கடமைகளைச் செய்ய அத்தகையோர் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.
''கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறை நடத்தப்படும் தேர்தலும் மூன்றாம் சுயேச்சைக் கட்சியால் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இத்தேர்தலுக்கான ஆணையமாக இருக்கும் ஓர் அனைத்துலக தணிக்கை நிறுவனம் இது. எனவே மத்திய நிர்வாக செயற்குழு உறுப்பினருக்கான தேர்ந்தெடுப்பு, தூய்மையாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்று அவர் கூறினார்.
இன்று ஜசெக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஸ்டீவன் சிம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)