பொது

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும்

07/03/2025 02:52 PM

புத்ராஜெயா, 07 மார்ச் (பெர்னாமா) --    ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் எஸ்.பி.ஆர் அறிவித்திருக்கிறது.

அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்காளிப்பு ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் என்று எஸ்.பி.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை பிரச்சாரம் மேற்கொள்ள 14 நாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரம்லான் கூறினார்.

''பேராக், என்.48 ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, பிப்ரவரி 22-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட, 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான கூடுதல் தேர்தல் வாக்காளர் பதிவு (டி.பி.பி.ஆர்) பயன்படுத்தப்படும். இந்த டி.பி.பி.ஆர்- இல் மொத்தம் 31,897 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 31,315 பொது வாக்காளர்கள் மற்றும் 582 போலீஸ் மற்றும் பி.ஜி.ஏ போலீஸ் தம்பதிகள் உள்ளனர்'', என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கண்காணிக்க மூன்று உதவியாளர்களின் உதவியுடன் ஒரு நிர்வாக அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

மேலும், இடைத்தேர்தலை வழிநடத்த 601 உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.

22 வாக்களிப்பு மையங்கள் செயல்படவிருக்கும் நிலையில், பேராக் தாப்பாவில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில் வாக்குகள் எண்ணப்படும்.

ஆயர் கூனிங் இடைத்தேர்தலுக்கான தேர்தல் ஆணையம் 25 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான 59 வயது இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து, அங்கே இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)