பொது

'30 நாள்களில் தமிழ்' அகப்பக்கம் அறிமுகம் 

09/03/2025 05:12 PM

கோலாலம்பூர், 09 மார்ச் (பெர்னாமா) - தமிழ்ப்பள்ளிகளை விடுத்து மற்ற பள்ளிகளிலும் அல்லது தனியார் பாலர் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும்போது, தமிழ்மொழியில் வாசிக்கவும் எழுதவும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

அத்தகைய மாணவர்களுக்கு எளிமையான முறையில் தமிழ்மொழியை கற்பிக்கும் பொருட்டு '30 நாள்களில் தமிழ்' எனும் புதிய அகப்பக்கம் நேற்று அறிமுகம் கண்டது.

30 நாள்களுக்குள் எவ்வாறு எளிய முறையில் தமிழைக் கற்றுத் தேர்வது என்ற ஆய்வை கடந்த 2016ஆம் ஆண்டே தாம் மேற்கொண்டு வந்ததாக அகப்பக்கத்தின் நிறுவனர் முனைவர் கஸ்தூரி இராமலிங்கம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமது பள்ளியிலும் அத்திட்டத்தை அமல்படுத்தியபோது மாணவர்களிடம் பெரிய மாற்றத்தை உணர்ந்ததுடன், பெற்றோரிடமிருந்தும் ஆதரவு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, தொழில்நுட்ப துணையுடன் நாடு தழுவிய அளவில் இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியே இந்த அகப்பக்க உருவாக்கத்திற்கு வித்திட்டதாக  மாசாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் கஸ்தூரி தெரிவித்தார்.

''30 நாட்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒருவகை விளையாட்டின் மூலமாக மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வார்கள். விளையாடுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்குமே தவிர மறைமுகமாக இருக்கும் தமிழ்மொழியையும் உடன் கற்றுக் கொள்கிறோம் அவர்கள் அறிந்திருக்கவேமாட்டார்கள். இறுதியில் தங்களுக்கே தெரியாமல் எளிமையான முறையில் தாய் மொழியை சிறப்பாக கற்றுத் தேர்ந்திருப்பார்கள்,'' என்று அவர் விவரித்தார்.

இந்த அகப்பக்கத்தின் உள்ளடக்கம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

''30 நாள்களுக்குரிய குறிப்புகள் காணொளி வடிவில் இருக்கும். அந்தக் காணொளியில் குழந்தைப் பாடல்கள், சரியான முறையில் எவ்வாறு தமிழ் எழுத்துகளை எழுதுவது, எவ்வாறு பிழையின்றி உச்சரிப்புடன் வாசிப்பது போன்றவையும் முழுமையாக இடம்பெற்றிருக்கும்,'' என்றார் அவர்.

ஒவ்வொரு தலைப்பு அல்லது பாடத்திலும் பயிற்சிகள் உடன் இணைக்கப்பட்டுள்ளதால் PDF படிவ முறையில் இருக்கும் அதை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் வகையில் 30 வகையான நாள்பாடத் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளதை முனைவர் கஸ்தூரி சுட்டிக்காட்டினார்.

முப்பது நாள்களுக்கு பின்னர் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறமையைப் பரிசோதிக்கும் வண்ணம் இணைய கதைகளும் அதை உட்படுத்திய கேள்விகளும் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், நேற்று மலேசியாவில் முதன் முறையாக கோலாலம்பூர் டான் ஶ்ரீ சோமா அரங்கில் வெளியீடு செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)