காக்ஸ் பசார், 09 மார்ச் (பெர்னாமா) -- அடுத்த மாதம் தொடங்கி உணவுக்காக வழங்கப்படும் தனது நிதி உதவியை அமெரிக்கா பாதியாகக் குறைக்கவுள்ளதால் வங்காளதேசத்தில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், 10 லட்சம் அகதிகளுக்கான உணவு விநியோகம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
அமெரிக்காவின் இம்முடிவினால், வங்காளதேசம், காக்ஸ் பசாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் இடையே மன அழுத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனிதாபிமான உதவிகள் தடைப்பட்டுள்ளன.
மேலும், டிரம்ப்பின் முடிவினால், காக்ஸ் பசாரில் மேற்கொள்ளப்பட்டு வந்த உணவுப் பங்கீடு ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி குறைக்கப்படும் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது.
மியன்மார் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையினால் , 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ரோஹிங்கியா மக்கள் மியன்மாரில் இருந்து வங்களாதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]