பொட்டனிக்கல் பூங்கா, 08 மார்ச் (பெர்னாமா) -- வாழ்நாள் முழுவதும் வீட்டிலும் பணியிடங்களிலும், வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பெண்கள் பல சமயங்களில் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள தவறி விடுகின்றனர்.
வேலைக்கு மத்தியில் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் SAREE WALKATHON எனப்படும் சேலை நடைப்பயணம் முதல்முறையாக, இன்று, கோலாலம்பூர், பொட்டனிக்கல் பூங்காவில் நடைபெற்றது.
வலிகள் பல சுமந்து பிள்ளையைப் பெற்றெடுத்து, குடும்ப பொறுப்பு என்ற சுமையோடு இருந்தாலும், அதை பாரம் என்று கருதாத பெண்களைப் போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அத்தினத்தை முன்னிட்டு, Nutri Heart ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிறு வயது முதல் முதியவர்கள் வரை சுமார் 400 பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டதாக SAREE WALKATHON நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பத்ரே கூறினார்.
''வேலைக்குச் செல்லும் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களின் உடல் நலனில் அக்கறைக் கொள்ள வேண்டும். இதுவே, அவர்கள் இங்கு கூடியிருப்பதற்கான முதன்மை நோக்கமாகும். நாங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களையும் இங்கு அழைத்திருக்கின்றோம். ஓய்வற்ற வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளும் பெண்கள் தங்களின் உடல் நலனை பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் விளக்குவார்கள்'', என்று அவர் கூறினார்.
கால மாற்றத்திற்கேற்ப, சேலைகளைக் கட்டும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தொடக்கக் காலத்திலிருந்து அது பெண்களின் Stereotype எனப்படும் மாறா நிலை சிந்தனையாக மட்டுமின்றி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் சின்னமாக விளங்குவதால், இந்நிகழ்ச்சிக்கு சேலையைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார்.
இதனிடையே, காலை பொழுதில் மிகுந்த உற்சாகத்துடன் பெண்கள் சேலை மட்டுமின்றி அதற்கேற்ற ஆபரணங்களையும் அணிந்துக் கொண்டு பூங்காவைச் சுற்றி நடந்து வந்த காட்சிகளைப் பார்ப்பதற்கு, வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் பூங்காவை வலம் வருவது போல் இருந்தது.
''பார்க்கும்போது நான் வியந்து விட்டேன். ஏனென்றால், சேலைகளைக் கட்டிக் கொண்டே நடனம் ஆடுகின்றார்கள். நிறைய பயிற்சிகளைச் செய்கிறார்கள். இது மிகவும் ஆர்வமாக இருக்கின்றது. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றது. சிறு வயது பெண்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் பங்குக் கொள்ளக் கூடிய நிகழ்ச்சி இது'', என்று லலிதா அப்புக்குட்டன் கூறினார்.
''பெண்கள் எப்பொழுதும் வேலை, குடும்பம், வீடு என்று இருப்பார்கள். நமக்கென்று Me Time இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், குறைவாக இருக்கின்றது. எனவே, இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாமும் இந்நிகழ்ச்சியில் ஒரு பங்காக கலந்து கொள்வோம். நமக்கென்று ஒரு நாள் வேண்டுமல்லவா ஆக, இந்த நாளை எடுத்துக் கொள்வோம்'', என்று கீதா மலர் முருகையா தெரிவித்தார்.
''மலாய்க்காரர்களின் பெருநாளின் போது அவர்களுடைய ஆடை அணிந்துக் கொள்வது, தீபாவளியின் போது நமது பாரம்பரிய உடையை அணிந்து கொள்வது, மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என அனைத்து தினங்களையும் நாங்கள் கொண்டாடுவோம். ஆனால், இங்கு வந்து மக்களைப் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது'', என்றார் ரேணுகா குப்புசாமி.
''பெண்கள் அனைத்துலக மகளிர் தினத்திற்கு இங்கு வந்து, இரண்டு கிலோமீட்டர் வரை நடந்துச் சென்றதுடன், ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகிக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த அளவிற்கு மக்கள் திரளுவது மிகவும் கடினம்'', யேசு செல்வி மாணிக்கம் கூறினார்.
நடைப்பயணத்தை நிறைவு செய்த அனைத்து பெண்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி சுமார் 11 மணியளவில் நிறைவடைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)