ஜோகூர் பாரு, 08 மார்ச் (பெர்னாமா) -- இன்று, ஜோகூர் பாரு, தாமான் மொலேக்கில் காலை சுமார் 3.10 மணிக்கு, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட குடியிருப்பில் உள்ள ஜாலான் பெர்சியாரான் பூமி ஹிஜாவ் பகுதியில், 63 வயதுடைய உள்ளூர் முதியவர் ஓட்டிச் சென்ற Honda Vario ரக மோட்டார் சைக்கிளைக் கண்டறிய போலீஸ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்ததாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
சோதனை நடவடிக்கையின் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் போலீஸ் உறுப்பினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதால், தங்களைத் தற்காத்து கொள்ள போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தியதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ குமார் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியின் தோட்டா தாக்கி, அம்முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
பிரேத பரிசோதனைக்காக அம்முதியவரின் சடலம் சுல்தான் இஸ்மாயில் Sultan Ismail மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பலியான முதியவர் முன்னதாக, 14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)