இஸ்மிர், 30 ஜூன் (பெர்னாமா) - துருக்கியின் இஸ்மிர் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு அங்கு வீசி வரும் பலத்த காற்றும் பெரும் தடையாக உள்ளது.
இஸ்மிரில் உள்ள பிரபல சுற்றுலா நகரமான மென்டரெசில், நேற்று கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் ஹெலிகாப்டர்களின் முயற்சியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று சிரமத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
11 விமானங்கள் மற்றும் 27 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 1,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக துருக்கியின் வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமாக்லி தெரிவித்தார்.
மேலும் கரும்புகையை சுவாசித்ததால் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியதாகவும் அவர் கூறினார்.
காட்டுத் தீயைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நான்கு கிராமங்கள் மற்றும் இரண்டு உள்ளூர் சுற்றுப்புறங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
புகை மூட்டம் காரணமாக இஸ்மிர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள விமானங்கள் தற்காலிகமாக பயணத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)