கோம்பாக், 03 ஜூலை (பெர்னாமா) -- விரைவு மற்றும் சுற்றுலாப் பேருந்து பயணிகள், தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் பட்டையில் ஏதேனும் பிரச்சனையுடன் பயன்படுத்த முடியாமல் இருந்தால், அவர்கள் MyJPJ செயலி வழி சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜேவுக்கு நேரடியாகப் புகார் அளிக்கலாம்.
மின்னஞ்சல் மூலமாக புகார் அளிப்பவர்கள், விசாரணையை எளிதாக்க சம்பந்தப்பட்ட இருக்கையின் புகைப்படம், காணொளி அல்லது பேருந்து பயண விபரங்களைத் தங்களின் புகாரில் தெளிவாக இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றனர்.
பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், பயணிகள் இருக்கை பட்டையை அணிய வேண்டும் என்று நினைவூட்டுவது பேருந்து ஓட்டுநர்களின் கடமையாகும் என்று கோலாலம்பூர் ஜேபிஜே இயக்குநர் ஹமிடி அடாம் கூறினார்.
இது பொதுப் போக்குவரத்து பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்துவதோடு, விரைவுப் பேருந்துகள் தொடர்பான விபத்துகளில் கடுமையான காயம் அல்லது மரணச் சம்பவங்களின் அபாயத்தைக் குறைக்கும்.
நேற்றிரவு, கோம்பாக் டோல் சாவடியில் விரைவு மற்றும் சுற்றுலாப் பேருந்துகளுக்கான இருக்கை பட்டை அணியும் சோதனையில் நடவடிக்கையின் போது விதிமுறையைப் பின்பற்றத் தவறிய 23 நபர்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும், அவர்களில் மூவர் வயது குறைந்த பயணிகள் என்றும் ஹமிடி அடாம் குறிப்பிட்டார்.
''18 வயது மாணவர்கள் சிலர் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறினர். மறந்துவிட்டதாகக் கூறியவர்களும் உள்ளனர். மேலும், சில பயணிகள் சோதனையிடும்போது மட்டுமே அதைப் பொருத்த முற்பட்டனர். எனவே, இதைத் தவிர்க்க வேண்டும். முனையத்தின் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் பயணிகளைக் கண்காணிக்க ஜேபிஜே உறுப்பினர்களை வைத்துள்ளோம். அமர்ந்ததுமே, அதைப் பொருத்தாமல் இருந்தால் ஜேபிஜே தரப்பிடம் அப்போது அணிவதுபோல நடிக்கக் கூடாது'', என்றார் அவர்.
நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்ற இந்நடவடிக்கையில் மொத்தம் 41 விரைவு மற்றும் மூன்று சுற்றுலாப் பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)