பாலி, 04 ஜூலை (பெர்னாமா) -- இந்தோனேசியா, பாலி தீவில் ஃபெரி மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போன 30 பேரை தேடி மீட்கும் பணியை அமலாக்கத் தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கிழக்கு ஜாவா பகுதியான கெதாபாங் துறைமுகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குப் பயணத்தைத் தொடங்கிய KMP Tunu Pratama Jaya எனும் அந்த ஃபெரி, 30 நிமிடங்களில் நீரில் மூழ்கியது.
வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பணிகள், போலீசார் மற்றும் இராணுவத்தினர் என 160 மீட்புப் பணியாளர்களுடன் இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டதாக, தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் ரிபுட் இகோ சுயாட்னோ தெரிவித்தார்.
வான்வழி தேடலை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஹெலிகாப்டர்கள் உட்பட ஆளில்லா விமானம் ஒன்றும் பயன்படுத்தப்படும் வேளையில், கடற்பகுதியில் தேடல் பணிகளை மேற்கொள்ள சுமார் 20 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
பெரிய அலைகள் காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறிய படகுகளுக்குப் பதிலாக கடற்படையின் மூன்று படகுகள் அனுப்படும் என்று சுயாட்னோ கூறினார்.
இச்சம்பவத்தில் இதுவரை அறுவர் உயிரிழந்திருக்கும் வேளையில், 29 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதோடு 30 பேரை காணவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)