ஜித்ரா, 05 ஜூலை (பெர்னாமா) -- இன்று காலை மணி சுமார் 8.05-க்கு கெடா, ஜித்ராவில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் போலீசாருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகனம் ஒன்றை கண்டதும் அதனை நிறுத்தும்படி, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதாக, கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே தெரிவித்தார்.
கட்டளைக்கு இணங்காத அச்சந்தேக நபர்கள் போலீஸ் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் விளைவாக வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக, டத்தோ ஃபிசோல் சாலே கூறினார்.
சம்பந்தப்பட்ட வாகனத்தில் மேற்கொண்ட சோதனையின் மூலம் Revolver மற்றும் Semi Auto வகை இரு துப்பாக்கிகள், பல தோட்டக்கள், ஒரு பாராங் கத்தி மற்றும் குற்றச்செயல்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக, இன்று சம்பவ இடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
41 வயதுடைய சந்தேக நபர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவருக்கு 40-க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதனிடையே, நாடு முழுவதிலும் போதைப்பொருள் கடத்தல், குண்டர் கும்பல், தொழிற்சாலை கொள்ளை மற்றும் வன்முறை போன்ற குற்றச்செயல்களைப் புரியும் ஒரு பெரிய கும்பலில் அவ்விருவரும் ஈடுப்பட்டிருந்ததாக, போலீசார் நம்புகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)