புக்கிட் ஜாலில், 05 ஜூலை (பெர்னாமா) -- தேசிய ஆடவர் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் லீ சி ஜியாவுக்கு தேவைப்பட்டால் அனைத்து உதவிகளையும் வழங்க தேசிய விளையாட்டு மன்றம் எம்.எஸ்.என் தயாராக உள்ளது.
அண்மையில் தமது சமூக ஊடக பக்கத்தில் மன அழுத்தம் தொடர்பாக வரைபடங்களை லீ சி ஜியா பதிவிட்டதால், அவரின் மனநலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், இது குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை என்றும், அந்த வரைபடங்கள் மீது சி ஜியா ஆர்வம் கொண்டிருக்கலாம் என்றும் எம்.எஸ்.என் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஙாடிரின் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் பெற இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ உட்பட தமது தரப்பு சி ஜியாவின் குழுவினரைத் தொடர்பு கொண்டதாக அவர் விளக்கினார்.
''இன்று காலை நாங்கள் அவரது (லீ சி ஜியா) நிர்வாகக் குழுவைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் லீ சி ஜியா குறித்துக் கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். ஒருவேளை லீ ஜி ஜியா ஆர்வத்தில் இருந்திருக்கலாம். அதனால் அவர் அந்த வகையான கலையில் (வரைபடம்) ஆர்வமாக இருந்ததால் அதனை பதிவிட்டிருக்கலாம். இருப்பினும், அவரது குழுவிற்கு எம்.எஸ்.என் அல்லது ஐ.எஸ்.என் உதவி தேவைப்பட்டால் எம்.எஸ்.என் தரப்பில் நாங்கள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறோம்'', என்றார் அவர்.
நடைபெற்ற 2025 விளையாட்டு தின நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் ஜெஃப்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, மனச்சோர்வு தொடர்புடைய வரைப்படத்தை சி ஜியா பதிவேற்றியதால் நாட்டின் பூப்பந்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட வித்திட்டது.
தற்போது உலக தரவரிசையில் 27வது இடத்தில் உள்ள சி ஜியா, ஜூலை 15 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)