ஃப்லொரஸ் தீமோர், 07 ஜூலை (பெர்னாமா) -- இந்தோனேசியாவின், ஃப்லொரஸ் தீமோர் மாவட்டத்தில் உள்ள லிவோட்டாபி லாக்கி-லாக்கி (Lewotobi Laki-Laki) எரிமலையின் சக்திவாய்ந்த வெடிப்பைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறும் அடர்த்தியான சாம்பலும் கற்களும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.
1,584 மீட்டர் உயரம் கொண்ட அந்த எரிமலை இன்று காலை மணி 11.05 அளவில் சுமார் 18 கிலோமீட்டர் உயரத்திற்கு வெடித்து சாம்பலைக் கக்கி துவங்கியதில், அப்பகுதி முழுவதும கரும்புகை சூழந்தது.
வெடிப்புகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக லிவோட்டாபி லாக்கி-லாக்கி எரிமலை கண்காணிப்பு குழு உறுதிப்படுத்தியது.
மேலும், நிலைமை மோசமடைந்தால் மலை சரிவுகளில் வசிப்பவர்கள்அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளைத் தவிர்க்க குடியிருப்பாளர்கள் சுவாசக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
அங்கு நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எரிமலையின் உச்சியில் இருந்து ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]