ரியோ டி ஜெனிரோ, 08 ஜூலை (பெர்னாமா) -- டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் வரி விதிப்புக்கு எதிராக உலக நாடுகள் சில குரல் கொடுத்துள்ளன.
அதில், பிரிக்ஸ் அமைப்பை ஆதரிக்கும் நாடுகள் மீது வரி விதிக்க போவதாக டிரம்ப் விடுத்த மிரட்டல் பொருத்தமற்றதாகவும் அச்சுறுத்தும் செயல் என்றும் பிரேசில் அதிபர் லுயில் இனாசியோ லுலா டா சில்வா சாடியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் இரு நாள்களுக்கு 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 17-வது பிரிகிஸ் உச்சநிலை மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடக தளத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தென் கொரியப் பொருள்களுக்கு வாஷிங்டன் 25 விழுக்காடு வரி விதிக்கும் என்று டிரம்ப் அறிவித்ததை அடுத்து, அமெரிக்காவுடனான வரி பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து தென் கொரிய அதிபர் அலுவலகம் அமைச்சுகளுடன் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஜப்பான் மீது 25 விழுக்காடு வரி விதிக்க டிரம்ப் எடுத்திருக்கும் முடிவு வருந்தத்தக்கது என்று அந்நாட்டின் பிரதமர் ஷிகெரு இஷிபா விமர்சித்துள்ளார்.
எனினும், அனைத்துலக நன்மையை உறுதிச் செய்வதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் வரி விதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டாலும், ஆரம்ப அச்சுறுத்தலை விட கட்டண விகிதம் குறைவாக இருப்பதாகவும் இது ஆக்கப்பூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதாகவும் இஷிபா விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]