வாஷிங்டன் டி.சி., 15 ஜூலை (பெர்னாமா) -- உக்ரேனில் நீடித்து வரும் ரஷ்ய போருக்கு எதிரான தமது கடும் நிலைப்பாட்டினை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இன்று வெளிப்படுத்தினார்.
உக்ரேனுக்கு ஆதரவாக புதிய ஏவுகணைகளையும் இன்னும் பிற ஆயுதங்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ள அவர், போர்நிறுத்தத்தை அடையவோ அல்லது தடைகளை எதிர்கொள்ளவோ மாஸ்கோவிற்கு 50 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செயலில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக, இன்று ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார் ரூட்டுடன் நடத்திய ஒரு சந்திப்பிற்குப் பின்னர் டிரம்ப் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
50 நாட்களுக்குள் மாஸ்கோ போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால், ரஷ்யா மீது வரிகள் மற்றும் தடைகளை விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
50 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது 100 விழுக்காட்டு வரிகளை விதிப்பதும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிப்பதும் டிரம்பின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், நோர்வே, நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக ரூட் கூறினார்.
உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப டிரம்ப் எடுத்த முடிவு, புதினுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தமது பதவிக் காலத்தின் ஆரம்ப மாதங்களில் புடினை ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து வந்த டிரம்ப், ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், நேட்டோ நாடுகளால் அனுமதிக்கப்படும் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
இதனிடையே, போரில் தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்கள் கோரி, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)