காசா, 15 ஜூலை (பெர்னாமா) -- காசா பகுதியில் யூதர் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 120 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 557 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் காசா பகுதியில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை தற்போது 58, 386 ஆக உயர்வு கண்டுள்ளது.
அதே நாளில், மத்திய காசாவில் உள்ள நுசைராத் அகதிகள் முகாமின் மீதும், குடிநீர் விநியோகிக்கும் வாகனத்தையும் குறிவைத்து இஸ்ரேலியர் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிழந்ததுடன் நால்வர் காயமுற்றனர்.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தொடங்கியது முதல் இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 77 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் யூத தரப்பினர் குறைந்தது 360 மருத்துவப் பணியாளர்களைத் தடுத்து வைத்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்று காட்டுகின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மருத்துவர்கள் பலர், மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்காமல் உள்ளது.
இந்நிலையால் அங்கு சுகாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)