பெட்டாலிங் ஜெயா, 20 ஜூலை (பெர்னாமா) - மலேசிய இந்து சங்கத் தேர்தலில் தங்க கணேசன் என்கிற கணேசன் தங்கவேலு சார்பில் போட்டியிட்ட அணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
தங்க கணேசன் அணியைப் பிரதிநிதித்து போட்டியிட்ட பத்து பேரில் எண்மர் வெற்றி பெற்றுள்ள வேளையில், அவர்களை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ் பாபுவின் அணியில் அவரும் முனைவர் முரளிதரனும் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48ஆவது பேராளர் மாநாட்டுடன் மத்திய செயலவைக்கான தேர்தலும் நடைபெற்றது.
பத்து செயலவையினரின் பதவிக்கு இரு அணிகள் சார்பில் மொத்தம் 20 பேர் போட்டியிட்டனர்.
அதில், 'வெற்றி' அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் 'மாறுவோம் மாற்றுவோம்' அணிக்கு கணேஷ் பாபு தலைமை தாங்கினார்.
இன்று காலையில் 2,120 பேராளர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றினர்.
மாலை மணி நான்குக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், 1,102 வாக்குகள் பெற்று நடப்பு தலைவர் தங்க கணேசன் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து புதிய மத்தியச் செயலவைக் கூட்டப்பட்டு தலைவர் உள்ளிட்ட இதர பொறுப்பாளர்களின் நியமனம் உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தங்க கணேசனைத் தொடர்ந்து இத்தேர்தலில் கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாஸ் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள் மற்றும் ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றிருந்த நிலையில்...
முனைவர் முரளிதரன் 1,031 வாக்குகள், தினகரன் 1,031 வாக்குகள் , கணேஷ் பாபு 1,028 வாக்குகள் மற்றும் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)