Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

13ஆவது மலேசியத் திட்டம்; இந்திய சமுதாயத்தின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வாய்ப்பளிக்கும்

30/07/2025 06:47 PM

கோலாலம்பூர், ஜூலை 30 (பெர்னாமா) -- RMK 13 எனப்படும் 13-ஆவது மலேசியத் திட்டம் என்பது நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டுச் செல்லும் மேம்பாட்டுத் திட்டமாகும்.

பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் அடிப்படை வசதி, கல்வி, வர்த்தகம், தொழில்துறை உட்பட பல கூறுகளை உட்படுத்தி, இத்திட்டம் வரையப்பட்டிருக்கும்.

அவ்வகையில், நாளை ஜூலை 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இத்திட்டம், இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவதோடு வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் முனைவர் ஜி. மணிமாறன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன, மத பேதமின்றி அனைவரும் முன்னேற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் 13-ஆவது மலேசியத் திட்டம் அமையும் என்பதை மறுக்க முடியாது.

எனினும், நாட்டில் இந்திய சமுதாயத்திற்கும் சில தேவைகள் இருந்து வருவதை, அண்மையில் தாம் கலந்து கொண்ட ஒரு கருந்தரங்கு வழி கண்டறிந்ததாக முனைவர் ஜி. மணிமாறன் தெரிவித்தார்.

அவற்றை தீர்ப்பதற்கு 13-ஆவது மலேசியத் திட்டம் முக்கிய பங்களித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

''அதிகமான இந்தியர்கள் இன்னும் பொருளாதார அடிப்படையில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.  மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவை வலுப்படுத்துவது குறித்து ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சிறுதொழில் செய்பவர்கள், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது. இம்முறை கோவில்கள் பற்றி பேசவில்லை. அதிகமாக பொருளாதாரம் பற்றிதான் பேசப்பட்டது. எனவே, அரசாங்கம் பல உதவிகளை செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.

13-ஆவது மலேசியத் திட்டத்திற்கு 43 ஆயிரம் கோடி ரிங்கிட்டில் இருந்து 45 ஆயிரம் கோடி ரிங்கிட் வரை ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முனைவர் மணிமாறன் கணித்துள்ளார்.

அதில் இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீடு எவ்வாறு பயனளிக்கும் என்பதை அவர் விளக்குகின்றார்.

''பள்ளிக்கூடம் கட்டுவது, வேலை வாய்ப்புகள், பொருளாதார வாய்ப்புகள், இலக்கவியல் பொருளாதாரம் ஆகியவை அடங்கும். அல்லது புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டுவது அல்லது இருக்கும் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும். இவை அனைத்தையும் பார்க்கையில் இந்தியர்களுக்கும் கண்டிப்பாக இருக்கும்,'' மணிமாறன் கூறினார்.

இத்திட்டத்தின் வழி, நாட்டில் உள்ள இந்தியர்கள் ஏதாவது ஒருவகையில் பலனடைந்திருப்பர்.

எனினும், சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்தால், அரசாங்க சார்பற்ற இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அவற்றை ஆய்வு செய்து, மீண்டும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முனைவர் மணிமாறன் ஆலோசனை வழங்கினார்.

''இது ஐந்து ஆண்டு திட்டம். இந்தியர்கள் அனைவரும் இணைந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் ஒப்படைக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். சில திட்டங்கள் செயல்படுத்தாமல் போக வாய்ப்பு உள்ளது. அதனை நாம் கேட்க வேண்டும்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகக் கடமையை கொண்டிருக்கும் மக்கள், மலேசியத் திட்டம் குறித்து தெரிந்து கொள்வதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று முனைவர் மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)