Ad Banner
Ad Banner
 பொது

6 வயது மகன் மரணம்; தந்தைக்கு ஒரு வாரத் தடுப்புக் காவல்

01/08/2025 01:05 PM

சிரம்பான், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஜூலை 28-ஆம் தேதி, ஜெம்போல், ரொம்பினில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு வயது சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு அவனின் தந்தை ஆகஸ்ட் ஏழாம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய அவ்வாடவருக்கான தடுப்புக் காவல் உத்தரவை இன்று, பஹாவ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் நோர்சாஷவாணி இஷாக் பிறப்பித்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தாபார் தெரிவித்தார். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் விசாரணையை மேற்கொள்ளும் வகையில் இந்தத் தடுப்புக் காவல் மேற்கொள்ளப்படுவதாக சுப்ரிதெண்டன் நோர்ஹிஷாம் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.  

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டா பகுதியில் தமது மகன் காணாமல் போனதாக அவ்வாடவர் கடந்த ஜூலை 24-ஆம் தேதி போலீஸ் புகார் அளித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. 

இந்நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஜெம்போல், ரொம்பினில் அச்சிறுவனின் சடலம் புதைக்கப்பட்டிருந்ததை போலீஸ் கண்டறிந்தது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]