கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் அமைதி மற்றும் அரசாங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை, மோதல்களால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆசியான் நாடுகளை ஒன்றிணைக்க மலேசியாவிற்கு வழிவகுத்துள்ளன.
வலுவான நிர்வாகம், மலேசியாவை வெளிநாடுகள் அங்கீகரிக்கவும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகுத்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இந்த நாடு அமைதியானது. ஏனென்றால், இந்த நாடும் அதன் அரசாங்கமும் வலிமையானவை. அதனால்தான் அதை பலவீனப்படுத்தும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த நாடு சீரழிந்து, தினமும் கோரிக்கைகளும் சண்டைகளும் நிறைந்ததாக இருந்தால், யார் வருவார்கள்? எனவே இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்,'' என்றார் அவர்.
தாய்லாந்து-கம்போடியா மோதலில் மத்தியஸ்தம் செய்ததற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தம்மை தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்ததாக அன்வார் கூறினார்.
''இரு பிரதமர்களையும் ஒன்றிணைத்து நீடித்த அமைதியை நிலைநாட்டிய அருமையான பணிக்கு, பிரதமர் அன்வார், நன்றி என்று அதிபர் டிரம்ப் தொடங்கினார். நான் நிச்சயமாக பணிவாக இருப்பேன். அவருக்கு நன்றி, சீனாவுக்கு நன்றி, ஆசியானுக்கு நன்றி,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையம், மைடெக்கில் நடைபெற்ற 'Karnival Mega 3 Dimensi 2025'-இன் தொடக்க விழாவில் அன்வார் உரையாற்றினார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர்கள் வரும் திங்கட்கிழமை கோலாலம்பூருக்கு வருகை புரிந்து, அவ்விரு நாடுகளின் எல்லை அமைதி தொடர்பான பல அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் விரிவாகவும் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)