Ad Banner
Ad Banner
 

19% வரி: அனைத்துலக சந்தையில் மலேசிய பொருள்களின் போட்டித்தன்மையைப் பாதிக்காது

02/08/2025 04:08 PM

ஜோகூர் பாரு, 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டின் மீது அமெரிக்கா விதித்த 19 விழுக்காட்டு வரி விகிதம், அனைத்துலக சந்தையில் மலேசிய பொருள்களின் போட்டித்தன்மையைப் பாதிக்காது.

உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் உற்பத்தியாளராக இந்தோனேசியா இருந்தபோதிலும், அதே வரி விதிக்கப்பட்ட இதர ஆசியான் நாடுகளுடன் ஒப்பிடும்போது, மலேசியாவுக்கான வரி விகிதம் போட்டித்தன்மை வாய்ந்தது என்று தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர், டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறினார்.

''செம்பனை அளவில் இந்தோனேசியா (உற்பத்தியாளர்) உலகிலேயே முதலிடத்தில் உள்ளது, நாம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றோம். இந்தோனேசியாவும் நம்மைப் போலவே 19 விழுக்காடு வரியைக் கொண்டுள்ளது. அது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன். அது நியாயமானதும் கூட,'' என்றார் அவர்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நாட்டின் பொருள் சந்தையைப் பாதிக்குமா என்பது குறித்து வினவப்பட்ட போது, ஜொஹாரி அவ்வாறு பதிலளித்தார்.

ஜோகூர், பாசிர் கூடாங்கில் நடைபெற்ற, பாசிர் கூடாங் தொகுதி அம்னோ கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மலேசிய இறக்குமதி பொருள்களுக்கான வரி விகிதத்தை, அமெரிக்கா 19 விழுக்காடாக குறைத்திருப்பது, ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)