ஜோகூர் பாரு, 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த மாத இறுதியில், ஜோகூர் பாரு நகரைச் சுற்றியுள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, காபி மற்றும் பழச்சாறு பானப்பொட்டலங்களில் போதைப் பொருளைக் கடத்தும் நடவடிக்கையை போலீசார் முறியடித்தனர்.
ஜூலை 25-ஆம் தேதி மதியம் 2.15 தொடங்கி மறுநாள் நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 49 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
போதைப்பொருள் பதப்படுத்துவது மற்றும் பொட்டலமிடும் நடைவடிக்கையில் முக்கிய நபராக செயல்படுவதாக நம்பப்படும், 31 வயதுடைய வியட்நாமிய பெண், அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.
"சந்தேக நபர் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் கெதமின் வகை போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீரக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பு சந்தேக நபரின் வசிப்பிடம் என்று போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பு மறு பொட்டலமிடும் இடமாக கண்டறியப்பட்டது," என்று குமார் தெரிவித்தார்.
போதைப் பொருட்களை தயாரிக்கவும் அதனை பொட்டலமிடவும் பயன்படுத்தும் கருவிகளையும் போலீசார் கைப்பற்றியதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
அதோடு, இது தொடர்பில், சரவாக்கைச் சேர்ந்த 35 வயது தெரன்ஸ் கி கெக் டிங் என்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும், அவர் வழக்கின் விசாரணைக்கு உதவ முடியும் என்று நம்பப்படுவதாகவும் குமார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)