Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

மீன் குளங்களைத் தூய்மைப்படுத்த ஆயத்தமாகும் எந்திரன்

03/08/2025 07:47 PM

கோலாலம்பூர், 03 ஆகஸ்ட் (பெர்னாமா) --   நீரின்றி அமையாது உலகு.

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.

மனித வாழ்வின் அஸ்திவாரமான நீரின் தன்மையும் அதன் தூய்மையையும் பாதுக்காக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதில், மீன் குளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும் நோக்கில் எந்திரன் ஒன்றை வடிவமைத்து, அதனை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யவுள்ளார்,மலாயாப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் அர்ச்சனா புதியப்பன்.

பொதுவாகவே, ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களின் ஆய்வை மேற்கொள்வதற்கும் அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து மானியம் பெறுவர்.

அதுபோல, Komuniti@UniMADANI திட்டத்தின் கீழ் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னதாக, நிதி அமைச்சிடமிருந்து சுமார் 2 லட்சம் ரிங்கிட்டை சமூக அடிப்படையிலான மானியமாக தங்கள் தரப்பு பெற்றதாக முனைவர் அர்ச்சனா புதியப்பன் கூறினார்.

இந்த மானியம் கொண்டு தயாரிக்கப்படும் ஆய்வுகள், வழக்கமானதாக இல்லாமல் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டிருந்ததால், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீன் வள உற்பத்தி துறையில் ஆராய்ச்சி ஒன்றை தாம் மேற்கொண்டதாக, அவர் தெரிவித்தார்.

"பொதுவாக, நீச்சல் குளத்தில் மாலை 7 மணிக்குப் பிறகு ஒரு எந்திரனை வைத்து சுத்தம் செய்வார்கள். அதைப் பார்த்துதான் எனக்கு இந்த எந்திரத்தை உருவாக்கும் எண்ணம் வந்தது. ஆனால், நீச்சல் குளத்தில் மீன்கள் இருக்காது, மண் இருக்காது, அழுக்குகள் இருக்காது. ஆனால், மீன் குளத்திற்கென்று உருவாக்கும் பொழுது இந்த கூறுகள் அனைத்தும் மிகவும் முக்கியம்", என்றார் அவர்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு சவால்களைக் கடந்து சுமார் ஏழு மாதங்களில் வெற்றிகரமாக 7 கிலோகிராம் எடைக் கொண்ட எந்திரனை உருவாக்கியதாக, அவர் கூறினார்.

அதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாதவாறு, நிலையான பொருட்களைக் கொண்டு எந்திரன் உருவாக்கப்பட்டிருப்பதாக, முனைவர் அர்ச்சனா விவரித்தார்.

"அதில் நாங்கள் நிலையான பொருட்களைத் தான் பயன்படுத்தியிருக்கின்றோம். பொதுவாக, நாம் வீட்டில் நீர் வடிகட்டியைப் பயன்படுத்துவோம். அதில் இருக்கக்கூடிய சில பிரிவுகளில் புதுப்பிக்க முடியாத ஆற்றல் உட்பட்டிருக்கும். ஆனால், நாங்கள் அதற்கு பதிலாக தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தியிருக்கின்றோம்", என்று அவர் கூறினார்.

மேலும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு மூன்று வகையான எந்திரன்களை தாம் உருவாக்கியதாக, அவர் தெரிவித்தார்.

மீன்பிடி தொழில்துறையினர்களின் பணியை எளிதாக்கும் இதுபோன்ற எந்திரன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல், குறைந்த விலையில் உள்நாட்டிலிருந்து, குறிப்பாக பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதாக முனைவர் அர்ச்சனா கூறினார்.

"முதலாவது, இலைகள், இறந்த மீன்கள் போன்றவற்றை சேகரித்து தூய்மைப்படுத்தும், இரண்டாவது, தண்ணீரை சுத்தம் செய்யும். இது இரண்டும் கையால் நாம் கட்டுப்படுத்தக்கூடியவை. மூன்றாவது, ஜி.பி.எஸ் மூலமாக பயன்படுத்துவது", என்று அவர் கூறினார்.

இதனிடையே, எந்திரனை முறையாக உருவாக்கி அதனை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர், எதிர்காலத்தில் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வணிக ரீதியில் அதனை விற்பனை செய்ய எண்ணம் கொண்டிருப்பதாக, ஆராய்ச்சிக்குழுத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

"இதனை முறையாக வடிவமைத்து விட்டு, நாங்கள் வணீக ரீதியில் கொண்ட செல்லவிருக்கின்றோம். பல்கலைக்கழகத்திலிருந்து சமுதாயத்திற்குக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும். அதுதான் மலாயாப் பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரம்", என்றார் அவர்.

முனைவர் அர்ச்சனாவின் ஆராய்ச்சியில் உருவாக்கம் கண்ட எந்திரனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா வரும் 6-ஆம் தேதி, பகாங், குவாந்தானில் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)