Ad Banner
Ad Banner
 பொது

ஒதுக்கீடுகளைக் கோரும் முன் உடன்பாட்டை எட்டுமாறு எதிர்கட்சிக்கு வலியுறுத்தினார் அன்வார் 

05/08/2025 04:56 PM

ஜாலான் பார்லிமன், 05 ஆகஸ்ட் (பெர்னாமா) -- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு இடையிலான உடன்பாடு முதலில் அடையப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

அவர்களிடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில், இவ்விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் உடனான சந்திப்பை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 

''நான் ஒப்புக்கொள்கிறேன், அதனால்தான் நான் துணைப் பிரதமரை (ஃபடில்லா) கேட்க திறந்த மனதுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் தொடங்குவதற்கு, முதலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஓர் உடன்பாடு இருக்க வேண்டும். இதுவரை அவர்கள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை. சிலர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்கிறார்கள். சிலர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்வதில்லை. எனவே, ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் (டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசிம்) முதலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும். பின்னர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள துணைப் பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்,'' என்றார் அவர். 

இது தொடர்பில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசிம் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]