Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மூன்றாவது உலக சாதனை முயற்சியில்  ஜெய் பிரபாகரன்

06/08/2025 07:52 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) - உடற்பயிற்சியில் இரு உலக சாதனை, இரு தேசிய சாதனை, ஓர் ஆசிய சாதனையை படைத்திருக்கும் ஜெய் பிரபாகரன் குணசேகரன், தமது 28-வது வயதிலே மூன்றாவது உலக சாதனையைப் படைக்கும் இலக்கில் களமிறங்கியுள்ளார். 

பகாங், கோலா லிப்பிசைச் சேர்ந்த இந்த இளைஞர், உடற்பயிற்சியில் தம்மை முழு நேரமாக அர்ப்பணித்து வரும் நிலையில் உலக சாதனையுடன் வளரும் தலைமுறைக்கு உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் சங்கம் ஒன்றையும் நிறுவும் முயற்சியை கையில் எடுத்திருக்கின்றார்.

2023-ஆம் ஆண்டில் 12 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உலக அளவில் சாதனைப் படைத்த பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே அச்சாதனையை முறியடிக்கும் வகையில் 15 மணிநேர உடற்பயிற்சியை ஜெய் பிரபாகரன் செய்திருந்தார். 

''அடுத்தபடியாக இடைவிடாது 18 மணிநேரம் உடற்பயிற்சி செய்து என் சொந்த சாதனையை மீண்டும் முறியடிக்கவிருக்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் நான் குறிக்கோளாக உள்ளேன். என்னைப் பார்த்து இன்னும் அதிகமானோர் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதும் எனது நோக்கம்,'' என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு, பகாங் மாநில அளவிலான தேசிய விளையாட்டு தினம் கோலா லிப்பிசில் நடைபெறவிருப்பதால் அத்தினத்தன்று 250 இளைஞர்களைக் கொண்டு ஒரு தேசிய சாதனையையும் படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜெய் பிரபாகரன் கூறினார்.

''பகாங்கில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பங்கேற்பாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள். குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்திலிருந்து 20 பேர் வரை கலந்து கொள்வார்கள். பகாங் மாநிலத்தில் உள்ள அனைவரின் பங்களிப்பும் அதில் நிறைவாக இருக்கும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

உடற்பயிற்சிக்கான அவசியம் மற்றும் அதில் அதிகமானோரை குறிப்பாக இளைஞர்களை இணைக்கும் விதமாக அரசாங்கத்துடன் இணைந்து MYFIT என்ற புதிய சங்கத்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''இந்திய உடற்பயிற்சி சங்கத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகமான கிளைகளைத் தொடங்கி அதில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு உடற்பயிற்சி கற்றுத் தரப்படும்,'' என்றார் அவர்.

உடற்பயிற்சி செய்வதற்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த இருபாலாரும் விருப்பம் கொண்டிருந்தாலும், முறையான பயிற்சியாளர்கள் இல்லாமல் சில சமயங்களில் பாதியிலே தங்களின் எண்ணத்தை கைவிட்டு விடுகின்றனர்.

எனவே, இத்தகைய சங்கம் தொடங்கி நாடு முழுவதும் கிளைகள் அமைத்து முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு வழிநடத்தினால் இன்னும் அதிகமானவர்கள் இதில் இணைவார்கள் என்று ஜெய் பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமது இத்திட்டத்திற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆதரவு வழங்கி இருப்பதாக தெரிவித்த ஜெய் பிரபாகரன், அனைத்தும் முறையாக கைக்கூடினால் இவ்வாண்டு இறுதியில் அதை அதிகாரப்பூர்வமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக பெர்னாமா செய்திக்கு வழங்கிய நேர்க்காணலின் போது தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)