கோலாலம்பூர், 08 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரி நியாயமற்றது என்று விமர்சிக்கப்படும் வேளையில், நாட்டின் நலனைக் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த இரு மடங்கு வரி விதிப்பு இந்தியாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதற்கான சவாலை தங்கள் நாடு துணிச்சலாக எதிர்கொள்ளும் என்று...
தமிழ்நாடு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான முனைவர் எஸ். சின்னம்மை பெர்னாமா செய்திகளிடம் விளக்கம் அளித்தார்.
அமெரிக்க தனது நட்பு நாடுகளுடன் கொள்முதல் உறவுகளை அணுக்கமாகிக் கொள்வது போல இந்தியாவும், தனது நாட்டின் நலனில் முக்கியத்துவம் அளித்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
அதனை குற்றம் சாட்டும் அமெரிக்காவின் எல்லா ஆணைகளுக்கும் இந்தியா அடிபணிய வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று சின்னம்மை சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் அறிவுசார் திறமைமிகு உழைப்பாளிகள், நிபுணர்கள் அதிகமானோர் காலங்காலமாக அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பங்களித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் தங்கள் நாட்டின் மீது இத்தகைய வரியை திணிப்பது நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கூடுதல் வரி ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற முக்கிய துறைகளை பாதிக்கும் என்றாலும், அதற்கு மாற்று வழியை கண்டறிவதில் இந்தியா முனைப்புடன் செயலாற்றும் என்றும்
அவர் குறிப்பிட்டார்.
இந்த பாதகமான சூழலை, சாதகமாக மாற்றும் வல்லமை கொண்டிருக்கும் இந்தியா இப்போதே அது தொடர்பில் சிந்திக்க தொடங்கி விட்டதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்நாட்டு சந்தையை அதிகரிக்கும் வழிகளை கண்டறியப்பட்டு வருவதாகவும் முனைவர் சின்னம்மை தெரிவித்தார்
இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி கடினமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாகவும், அதற்காக அவர் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல், விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து பேசியிருப்பதாக சின்னம்மை தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)