கோத்தா கினபாலு, 12 ஆகஸ்ட் (பெர்னாமா) - தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன் வய், மரியாதை நிமித்தம் சபா மாநில ஆளுநர் துன் மூசா அமானை இன்று ஶ்ரீ கினபாலு அரண்மனையில் சந்தித்தார்.
சபா மாநில ஆளுநராக துன் மூசா அமான் பொறுப்பேற்றது முதல் டத்தோ ஶ்ரீ வோங்
முதல் முறையாக அவரை சந்தித்திருந்தார்.
அவருடன் சபா மாநில பெர்னாமா தலைவர் ஃபட்சில் ரம்லி, செய்தி ஆசிரியர் நோராஸ்லினா ஜின்டே, புகைப்படக் கலைஞர் சமாய்ன் சிங்குய் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
சிறப்பு வருகையாளர்களுக்கான மண்டபத்தில் நட்பின் அடிப்படையில் சுமார் 40 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது.
அதில் குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதைத் தடுப்பதில் அரசு ஊடக நிறுவனங்களின் பங்கு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
சபாவின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் தற்போதைய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வது குறித்தும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான செய்தி ஒளிபரப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக வோங் கூறினார்.
பெர்னாமா, மலேசிய வானொலி தொலைகாட்சி RTM, தகவல் துறை போன்ற அரசாங்க ஊடகங்கள், குறிப்பாக பல்வேறு அரசியல், சமூக, வளர்ச்சி மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில், சபாவில் செய்தி ஒளிபரப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, சபா மற்றும் தீபகற்ப மக்கள் சரியான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதற்கு, ஓர் அரசாங்க ஊடக நிறுவனம் என்ற முறையில், துல்லியமான செய்தியை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் வோங் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)