Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அமெரிக்கா வரி; போயிங் விமானங்களை வாங்குவதில் மாஸ்சிற்கு அழுத்தம் இல்லை

26/08/2025 04:30 PM

கோலாலம்பூர், 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமெரிக்கா விதித்த வரியை 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைப்பதற்கான நிபந்தனையாக, 30 Boeing விமானங்களை வாங்குவதற்கு Malaysia Airlines, மாஸ்சிற்கு எந்த அழுத்தமும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI திட்டவட்டமாக கூறியது.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், MAS கடற்படையைப் புதுப்பிப்பதற்கான முடிவு, வணிக ரீதியான பரிசீலனைகள் மற்றும் நீண்டகால செயல்பாட்டுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் MITI தெளிவுப்படுத்தியது.

B737 MAX ரக 25 விமானங்களை வாங்குவதற்கு 2016-ஆம் ஆண்டு தொடங்கியே முன்பதிவு செய்யப்பட்டதோடு, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்பே அந்த முன்பதிவு செய்யப்பட்டதையும் MITI சுட்டிக்காட்டியது.

அமெரிக்கா விதித்த வரியைக் குறைப்பதற்காக, 30 போயிங் வணிக விமானங்களை வாங்குவதற்கு MAS-க்கு அழுத்தம் ஏற்பட்டதா என்று செனட்டர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஜாஹிட் யுசோப் எழுப்பியக் கேள்விக்கு MITI அவ்வாறு பதிலளித்தது.

அதேவேளையில், 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதலாக B737 MAX ரக 30 விமானங்களை வாங்குவது, 14 ஆண்டுகள் பழமை வாய்ந்த விமானங்களை மாற்றும் கட்டம் கட்டமான புதுப்பிப்பு வியூகங்களின் ஒரு பகுதியாகும் என்று MITI தெரிவித்துள்ளது.

உலகளாவிய விமான நிறுவனங்களின் கடுமையான போட்டியை எதிர்கொண்டு, மாஸ் பாதுகாப்பு நிலை நீடித்திருப்பதை உறுதி செய்யவும், எரிபொருள் செயல்திறன் மற்றும் சந்தை நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை அவசியம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)