கோலாலம்பூர், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய மின்னியல் உபரிப்பாக வியூகம், N-S-S அமலாக்கத்தின் வழி, உலகளாவிய மின்னியல் உபரிப்பாக விநியோகத்தில் நடுத்தர சக்தியாக தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சியடைந்து வரும் நாட்டின் மின்னியல் உபரிப்பாக துறை, சோதனை மற்றும் பொட்டலமிடும் நடவடிக்கைகளில் சுய பலமாக செயல்படுவதாக முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் டோங் தெரிவித்தார்.
பன்னாட்டு நிறுவனங்களான MNCs-வில் மலேசியாவை முக்கிய முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு வியூகத் தளம் மற்றும் முழுமையான உள்கட்டமைப்பு ஆகியவை இதரக் காரணங்களாக இருப்பதாக சின் டோங் கூறினார்.
உயர் தொழில்நுட்பத் துறையில் உள்நாட்டு பணியாளர்களின் திறன்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.
''2024ஆம் ஆண்டு பிரதமர் தேசிய மின்னியல் உபரிப்பாக வியூகத்தை அறிமுகப்படுத்தினார். மேம்பட்ட பொட்டலமிடுதல் போன்ற மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில், ஒரு மலேசிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார் அவர்.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையில் நான்காயிரத்து 557 பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சிகள், 23 ஆயிரம் வேலைவாய்ப்புகளை அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகளை NSS பதிவு செய்துள்ளதாக லியூ கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)