புத்ராஜெயா, 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தெற்கில் இருந்து ஜோகூர் பாரு வழித்தடத்திற்கான மின்சார ரயில் சேவை, இ-டி-எஸ்-3 இவ்வாண்டு டிசம்பரில் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாருவுக்கான தண்டவாள உள்கட்டமைப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இ-டி-எஸ்-3 திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
தற்போது, சமிக்ஞை அமைப்பு பணிகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், இத்திட்டத்தின் முழு உள்கட்டமைப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார்.
ஜோகூர் பாருவிற்கான இ-டி-எஸ்-3 திட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றதாகவும், சில தரப்பினர் கூறுவது போல் எந்த தாமதத்தையும் சந்திக்கவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே, சிலாங்கூர், ஷா ஆலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை இணைக்கும் எல்.ஆர்.டி எனப்படும் மூன்றாவது இலகு ரயில் சேவை, இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக லோக் கூறினார்.
''இந்த ஆண்டு இறுதிக்குள் எல்.ஆர்.டி3 செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது மூன்றாம் காலாண்டின் இறுதியில் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், இன்னும் பல சோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் சிறிது தாமதம் ஏற்படுகிறது,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய லோக் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)