புத்ராஜெயா, 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பயணிகள் போக்குவரத்தைப் பாதிக்கக்கூடிய தொழில்நுட்ப இடையூறுகளைத் தடுக்க, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-இன், முதலாவது முனையத்தில் உள்ள ஏரோட்ரெய்ன் சேவையைத் தொடர்ந்து கண்காணித்து பராமரிக்குமாறு போக்குவரத்து அமைச்சு, மலேசிய ஏர்போர்ட்ஸ் குழும நிறுவனம், எம்.ஏ.எச்.பி-க்கு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை முதலாம் தேதி சேவை தொடங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் இந்த ஏரோட்ரெய்ன்-ஐ பயன்படுத்தியுள்ளனர்.
இது நாட்டின் முக்கிய நுழைவாயிலில், ஒரு முக்கிய இணைப்பாக, அச்சேவையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
''பிரதான முனையத்திற்கும் செயற்கைக்கோள் முனையத்திற்கும் இடையிலான பயணிகள் நடமாட்டம் தினமும் மிகவும் அதிகமாக உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர். நிச்சயம், எந்தவொரு தொழில்நுட்ப இடையூறும் பயணிகளைப் பாதிக்கும். மேலும், கே.எல்.ஐ.ஏ-இல் ஒரு முக்கியமான சேவையாக (ஏரோட்ரெய்னின்) நம்பகத்தன்மை, (பயணிகளின்) நடமாட்டம் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிசெய்யும் அளவுக்கு அதிகமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.
போக்குவரத்து அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்தோணி லோக், சில தொழில்நுட்பம் சார்ந்த கோளாறுகள் நிகழ்ந்திருந்தாலும், ஏரோட்ரெய்ன் சேவை பொதுவாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)