கோலாலம்பூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், யு.டி.எம்-இன் PALAPES பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடினின் இரண்டாவது பிரேதப் பரிசோதனை செயல்முறை தொடர்பான விசாரணை முழுவதிலும், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு, மலேசிய ராணுவப்படை, ஏ.டி.எம் முழு ஒத்துழைப்பை வழங்கும்.
ஷம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்கள் தரப்பு கருத்தில் கொண்டு மதிப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
உயிரிழந்தவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக முஹமட் காலிட் கூறினார்.
இவ்வழக்கின் முன்னேற்றத்தை தற்காப்பு அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கவிருப்பதோடு, நடைமுறையில் உள்ள சட்ட கொள்கைகளின்படி விசாரணையைப் பூர்த்தி செய்ய அதிகாரிகளிடம் முழுமையாக ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குசரன் சிங் ப்ரீத், சிலாங்கூர், செமெனியில் உள்ள கம்போங் உலு இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் ஷம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட உத்தரவிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)