கோலாலம்பூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கிக் எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனை அங்கீகரிக்கும் நோக்கத்தில், 2025-ஆம் கிக் தொழிலாளர் சட்ட மசோதா, நாளை இரண்டாம் வாசிப்பிற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
சட்ட மசோதா தாக்கலை ஒத்திவைக்குமாறு சில தரப்பினர் நெருக்குதல் அளித்தாலும், நாட்டில் சுமார் 12 லட்சம் Gig தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதைத் தொடர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மனிதவள அமைச்சர், ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
''இந்த நிலைக்கு வந்ததது, எளிதானது அல்ல. பல ஆண்டுகளாக காத்திருந்தோம். எளிதானது என்றால் முன்பே செய்திருப்போம். அதனை ஒத்திவைக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் அரசாங்கம் தயாராக உள்ளது. இது அரசியல் விவகாரம் அல்ல. மக்கள் நலன் தொடர்பானது. கிக் தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, நாடாளுமன்றக் கட்டிடத்தில் தரை பொதுப் போக்குவரத்து உருமாற்ற சங்கம், TPAD-டிடம் இருந்து மகஜரை பெற்ற பிறகு, ஸ்டீவன் அவ்வாறு கூறினார்.
கடந்த திங்கட்கிழமை மக்களவையில் முதல் வாசிப்பிற்காக தாக்கல் செய்யப்பட்ட அச்சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து, அச்சங்கத்தைச் சேர்ந்த 150 உறுப்பினர்களுடன் இணைந்து TPAD தலைவர், எம். நாதன் அந்த மகஜரை சமர்ப்பித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)