ஈப்போ, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 17 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, ஆசிரியர் ஒருவர், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், ஈப்போ, கெர்பாங் இண்டாவில் உள்ள ஒரு வீட்டிலும், 27-ஆம் தேதி ஒரு இடைநிலைப்பள்ளியின் பாதுகாவலர் அறையிலும், அச்செயலைப் புரிந்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் செக்ஷன் 16 உடன் வாசிக்கப்பட்ட செக்ஷன் 14(a)-வின் கீழ் அம்மூன்று குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.
அனைத்து குற்றத்திற்கும், 15,000 ரிங்கிட் ஜாமின் தொகை நிர்ணயித்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க, நீதிபதி ஜீன் ஷர்மிலா ஜேசுதாசன் அனுமதியளித்தார்.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுவதோடு, வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவரையும் சாட்சிகளையும் அணுகவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)