ஜாலான் பார்லிமன், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆர்.எம்.கே எனப்படும் 13-வது மலேசியா திட்டம் மற்றும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் மாநில அரசாங்கங்கள் பரிந்துரைத்த வளர்ச்சி திட்டங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்வதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
முன்வைக்கப்படும் திட்டங்களைக் கேட்டு மதிப்பீடு செய்வதற்காக, மாநில அரசாங்கங்களுடன் தொடர் கலந்துரையாடல்களை நடத்தும் அணுகுமுறையை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
''நான் மாநிலங்களுக்குச் செல்கிறேன். 'அன்வார் துருன்' ஆனால் மாநிலங்களின் தேவைகளைக் கேட்கச் செல்கிறேன், கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா உள்ளிட்ட மந்திரி புசார்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் பல முன்னுரிமைகளைப் பரிந்துரைத்தனர். சில நேரங்களில் இவை மத்திய அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சின் முன்னுரிமைகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் நான் அவற்றை மாற்றியமைத்து, மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்று அல்லது இரண்டு முன்னுரிமைகளை ஏற்றுக்கொள்வோம். இவற்றை இந்த அக்டோபரில் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பேன்'', என்றார் அவர்.
இன்று, மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
மாநில அரசாங்கங்கள் பரிந்துரைக்கும் தேவைகளின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் மற்றும் பிற வசதிகளின் மேம்பாடு, இலக்கவியல் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று நிதி அமைச்சருமான அன்வார் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)