ஜாலான் பார்லிமன், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆர்.எம்.கே எனப்படும் 12-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் 500,000 மலிவு விலை வீடுகளைக் கட்டுவதற்கான இலக்கு, இதுவரை 98.8 விழுக்காடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரையில் மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 874 வீடுகளின் கட்டுமானம் நிறைவுப் பெற்று அல்லது செயல்படுத்துவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக, பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 311 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வெண்ணிக்கை தேவையை மீறி இருப்பதாக, டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, கூடுதலாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 371 அல்லது 43.5 விழுக்காடு வீடுகள் தற்போது கட்டுமானத்தில் இருப்பதாகவும், எஞ்சிய 79 ஆயிரத்து 192 அல்லது 15 விழுக்காடு வீடுகள், கட்டுமானத் திட்டமிடலுக்குக் காத்திருப்பதாகவும் பிரதமர் விவரித்தார்.
''ஆர்.எம்.கே 12-இல் இலக்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதன் செயல்பாடு மிதமாக உள்ளது. ஏனென்றால், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. எனினும், மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இதை செய்ய முடியும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அதாவது, மீதமுள்ள 6,126 மலிவு விலை வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அர்த்தம்'', என்றார் அவர்.
இன்று மக்களவையில், 12-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்ட மலிவு விலை வீடுகளின் அண்மைய எண்ணிக்கை மற்றும் அதன் விழுக்காடு குறித்து கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஹ்மாட் அம்சாட் முஹமட்@ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு, அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)