Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மித்ராவின் செயற்குழு கூட்டத்திற்கு டத்தோ ஶ்ரீ ரமணன் தலைமையேற்றார்

28/08/2025 05:29 PM

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) --   இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்திய உருமாற்றுப் பிரிவு, மித்ராவின் செயற்குழு கூட்டத்திற்குத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையேற்றார்.

கடந்த 19-ஆம் தேதி, மித்ராவின் கீழ் நான்கு புதிய திட்டங்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதனை செயல்படுத்த பிரதமரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இக்கூட்டம் நடைபெற்றதாக ரமணன் கூறினார்.

நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக மொத்தம் 4 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் நான்கு முயற்சிகளைப் பிரதமர் முன்னதாக அறிவித்திருந்தார்.

அதில், இந்திய கிராமங்களின் உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது, தமிழ்ப்பள்ளிகளின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், ICT ஆய்வக உபகரணங்களை மேம்படுத்துவதற்காக முறையே 50 லட்சம் ரிங்கிட், தர்மா மடானி திட்டத்தின் கீழ் இந்து வழிபாட்டு தளங்களுக்கு 2 கோடி ரிங்கிட் மற்றும் தோட்டத்து தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கான சிறிய மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்கு ஒரு கோடி ரிங்கிட் ஒதுக்கீடுகள் அடங்கும்.

இந்திய சமுதாயம், குறிப்பாக பி40 பிரிவினர்கள், எந்தவொரு அதிகாரத்துவ இடையூறுகளுமின்றி அரசாங்கத்தின் முயற்சிகளின் மூலம் நேரடி நன்மைகள் பெறுவதை உறுதி செய்வதை தங்கள் தரப்பு முக்கியத்துவம் அளிப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, நெறிமுறை பிரிவு மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் போன்ற பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், இம்முயற்சி விரைவாகவும், வெளிப்படையாகவும், திறமையாகவும், தெளிவான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)