புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியாவின் 2025 தேசிய தின கொண்டாட்டம், வண்ணமயமான சூழலுடன் புத்ராஜெயா சதுக்கத்தில் கோலாகலமாக களைக்கட்டியது.
நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்த, பல்லின மக்கள் ஒன்றிணைந்து கடல் வெள்ளம்போல் புத்ராஜெயா சதுக்கத்தில் நிறைந்ததில், நாட்டின் 68-வது சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிறைந்திருந்த இந்தக் கொண்டாட்டத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சரித் சோஃபியாவும் கலந்து கொண்டனர்.
பிரமுகர்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் வரிசையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், இரு துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், மைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர்.
2025 தேசிய தினம் மற்றும் மலேசிய தினம், HKHM செயற்குழுவின் ஏற்பாட்டில், இவ்வாண்டு கொண்டாட்டம் மலேசிய மடானி அரவணைக்கப்படும் மக்கள் என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்படுகிறது.
ஒற்றுமை, நல்வாழ்வு மற்றும் மனிதநேய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட மலேசிய மடானி கொள்கைகளுடன், மக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.
14,062 பங்கேற்பாளர்களை உட்படுத்தி பொருளாதாரம், தொலைத்தொடர்பு, படைப்புத்திறன், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய துறைகளைச் சேர்ந்த அணிவகுப்புகள் கவனம் ஈர்த்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)