கோத்தா கினாபாலு, 08 செப்டம்பர் (பெர்னாமா) - சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு தொடர்பான பொருள்கள் அல்லது சான்றுகளை பொதுமக்கள், சமூக ஊடகங்கள் வழியாகப் பகிரவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று மரண விசாரணை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது தொடர்பான புகாரைப் பெற்ற பின்னர், அந்த எச்சரிக்கையை விடுத்த சபா மரண விசாரணை அதிகாரி அமிர் ஷா அமிர் ஹசான், அத்தகைய செயல் நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கருதப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
சாராவின் மரணம் தொடர்பான விசாரணை மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்தது.
காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அது குறித்த சில சான்றுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமிர் ஷா தெரிவித்தார்
அவ்விவகாரம் தொடர்பில், அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய வேதியியல் துறையின் தடயவியல் அறிவியல் பகுப்பாய்வு மையத்தின் ஆவணப் பரிசோதனைப் பிரிவின் பரிசோதகரான 44 வயது நூருல் அதிக்கா முஹமட் நோ என்பவரின் வாக்குமூலத்தை நீதிமன்றம் செவிமடுத்தது.
நான்கு பயிற்சி நூல்கள், இரண்டு பாடப்புத்தகங்கள் மற்றும் 15 தாள்கள் வைக்கப்பட்டிருந்த 21 பைகளை தமது தரப்பு பெற்றதாக நூருல் அதிக்கா கூறினார்.
அவை அனைத்தும் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமானவை என்றும் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)