பட்டர்வெர்த், 16 செப்டம்பர் (பெர்னாமா) - மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி மற்றும் பெர்னாமா நடமாடும் அரங்கத்துடன் இணைந்து இணையப் பயணத் திட்டம் ஒன்றை தொடர்பு அமைச்சு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
தொடர்ச்சியான பயணங்கள் மூலம், இணைய சேவைக்கான சரிபார்ப்புகளை நேரடியாக களத்தில் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் அமையும் என்று, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"பெர்னாமா நடமாடும் அரங்கம் எங்களுக்கு அதிகம் உதவுவதை நான் காண்கிறேன். நாங்கள் களத்திற்குச் செல்ல முடியும். மேலும், அதை இயக்குவது எங்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் உட்பட, மக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்க பல கூடுதல் திட்டங்களை நாங்கள் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Seri Mohamad Fauzi Md Isa, பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி Datin Paduka Nur-ul Afida Kamaludin, பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வெளிப்புற ஒளிபரப்பு நடவடிக்கைகளில், 'motorhome' எனப்படும் பொழுதுபோக்கு வாகனத்தைப் பயன்படுத்திய முதல் ஊடக நிறுவனமாக விளங்கி, தேசிய ஒளிபரப்பு உலகில் பெர்னாமா முன்னதாக வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)