கோத்தா பாரு, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் உத்தரவாதம் அளித்ததுள்ளது.
இக்கட்டுப்பாடு பயனளிக்கும் விதமாக, பல்வேறு அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பி.டி.ஆர்.எம் அணுக்கமாக செயல்படும் என்று தேசிய போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
''கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதோடு, குறுகிய காலத்தில் பல்வேறு விவகாரங்களை நம்மால் தீர்க்க முடியும் என்றும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனவே, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்தும் இதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. அவ்வாறு, இருப்பின் இவ்விவகாரம் தொடர்பிலான பிரச்சனைகள் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்,'' என்றார்.
இன்று கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற 218-ஆவது போலீஸ் தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற 17-ஆவது பிடிஆர்எம் பொது அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
எல்லைப் பகுதி நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, சட்டவிரோதமாக இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட உரிமம் பெறாத வளாகங்களின் விவகாரங்கள் உட்பட, கிளந்தானுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளப்படும் என்று முஹமட் காலிட் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)