கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) - தரமான படைப்புகளின் மூலம் தமிழ்ப் படைப்பாளர்களை அங்கீகரித்து அவர்களுக்கு ஆக்கப்பூர்வ உத்வேகத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை.
இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவோடு 39ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் பேரவைக் கதைகள் போட்டியில் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் புதிய கோணத்திலும் புத்தாக்க சிந்தனையிலும் ஆன படைப்புகளை அதன் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இம்முறையும் மாணவர், பொது மற்றும் அனைத்துலகப் பிரிவு என்று, மூன்று பிரிவுகளில் இப்பேரவைக் கதைகள் போட்டி நடத்தப்படுவதாக 39ஆவது பேரவைக் கதைகள் போட்டியின் துணை இயக்குநர் சிவரஞ்சினி முரளிதரன் தெரிவித்தார்.
"இதில் கலந்து கொள்பவர்கள் முதலில் பதிவு பாரத்தை பூர்த்தி செய்த பின்னர் விதிமுறைகள் வழங்கப்படும். அந்த விதிமுறையில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஆவண விவரங்களையும் போட்டியாளர்கள் முறையாக அனுப்ப வேண்டும். கதையுடன் இந்த அனைத்து விவரங்களும் முறையே இருந்தால் மட்டுமே அப்படைப்பு போட்டிக்கு சேர்த்து கொள்ளப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு அனுப்பப்படும் சிறுகதைகள் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்பதற்கு எந்தவொரு தலைப்பையோ கருப்பொருளையோ ஏற்பாட்டுக் குழு நிர்ணயிக்கவில்லை என்றாலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்த்து கொள்ளுமாறு சிவரஞ்சினி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தங்கள் படைப்புகளை அனுப்புவதற்கு முன்னதாக, போட்டியாளர்கள் அதற்கான மின்னியல் பாரத்தை முதலில் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வெற்றி பெற்ற அனைத்து படைப்புகளும், பின்னர் நூலாக வெளியிடப்படும் என்றும் சிவரஞ்சனி தெரிவித்தார்.
இதனிடையே, தற்கால சிந்தனையைச் சார்ந்த முதிர்ச்சியான எழுதுப்படிவங்களை அனுப்புவதற்கு போட்டியாளர்கள் முனைய வேண்டும் என்றும் சிவரஞ்சனி கேட்டுக் கொண்டார்.
படைப்புகளை '39peravaikathaigal@gmail.com' எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
தொடர்புக்கு : 016-417 4912 (ரூபன் ராஜ்)
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)